Thursday 30 June 2011

சமச்சீர்க் கல்வி தேவையா?

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் சமூகத்தில் சமமான சீரான கல்வி கொடுத்தாலே அது சமச்சீர்க் கல்வி ஆகாது.


பணம்


வீட்டுக்கு வீடு பொருளாதார வித்தியாசம். இதனால் ஒரு பிள்ளைக்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது. இன்னொரு பிள்ளைக்கு உணவு என்பதே பள்ளியில் வருசையில் முண்டியடித்துப் பெறும் சத்துணவுதான் என்கிறபோது மற்ற கல்விச் செலவுகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.


பெற்றோர் விழிப்புணர்வு


பணம் இருந்தாலும் பொற்றோருக்கு படிப்பில்லை என்றால் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதலும் ஊக்குவிப்பும் கிடைக்காது. சென்ற ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு சம்மந்தமாக நடந்த போராட்டங்கள் போது ஒரு அரசு ஊழியர் சொன்னது “ என் அண்ணன் பையன் ஐ.டி.ஐ. படிச்சுட்டு சும்மாதான் சுத்தரான். அதுக்குப் போய் இப்பிடி அடிச்சிகிறாங்க” . ஐ.ஐ.டி. க்கும் ஐ.டி.ஐ. க்கும் வித்தியாசம் தெரியாத அரசு ஊழியர். அவர் வீட்டு கல்விச் சூழல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் வீட்டுப் பிள்ளை நாலு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினாலேயே தலையில் துாக்கி வைத்து ஆடும் பொற்றோர்கள். தான் பெரிய அறிவாளி என்று எண்ணிக் கொள்ளும் பிள்ளைகள். இதனால் அவர்கள் மனம் நிறைவடைந்து விடுகிறது. போட்டி உலகம் எதிர்பார்க்கும் திறமைகள் வளர்த்துக் கொள்ள அந்த மனநிறைவே தடையாக அமைந்து விடுகிறது.


இன்னொரு புறம் அக்கா, அண்ணன்,மாமா,மாமி, ஒன்னுவிட்ட அத்தையும் ரெண்டுவிட்ட அத்தின்போரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொள்ளும் போது புனால இருக்குற தொழிற்படிப்ப பத்தியும், அகமதாபாத்ல இருக்க அதன் மேற்படிப்ப பத்தியும், அதுக்கு அமெரிக்கால இருக்குற கிராக்கியை பத்தியும் பேசக் கேட்டு வளர்ர குழந்தையோட மனதும் கல்வி சம்மந்தமான பார்வையும் எவ்வளவு விரிவடைந்து இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள் .


பணமும் கல்வியும் ஒருசேர இல்லாத ( பெருண்பாண்மை உழைக்கும் ) குடும்பங்களின் பிள்ளைகளின் மனம், கல்வி - வேலைவாய்ப்பு பற்றிய பார்வையில் எவ்வளவு பின்தங்கியிருக்கும் என்று தனியாக சொல்லத் தேவையில்லை.


இந்த வீடுகளில் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதும், அதைப் பார்த்துப் பிள்ளைகள் கதறுவதும் மிகச் சாதாரணம்


ஆணாதிக்க மனோபாவம்


உயர்சாதியினரிடம் ஆணாதிக்க மனோபாவம் இருந்தாலும் கல்வி - வேலைவாய்ப்பு என்று வரும்போது சந்தர்ப்பவாதத்துடன் தங்கள் கொள்கைகளை சமரசம் செய்து கொள்கிறார்கள். அரசு உயர் பதவிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பிராமண பெண்களுக்கும் திருமணங்கள் நடப்பதை நீங்கள் சாதாரணமாகப் பார்க்கலாம். சுயநலத்திற்காக இவை நடந்தாலும் கூட அகமணமுறையை விட்டு வெளியே வருவதால் இதை நாம் வரவேற்கலாம்.


ஆனால் மற்ற சாதியினரிடையே பெண்கல்வி இன்னும் போதிய அளவு வளரவில்லை.

நமக்கு தெரிந்த ஒரவர், குறைவாக மதிப்பெண்வாங்கிய மகனை கடன் வாங்கி அதிக பணம் கொடுத்து பெரிய கல்லுரியில் சேர்த்தார். அவரது மகள் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நல்ல கல்லுாரில் இடம் கிடைத்தும் கல்லுாரி தொலைவாக உள்ளது- பெண் பிள்ளை விடுதியில் தங்குவதை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் ஒரு “ டுபாகூர் ” பொறியியல் கல்லுாரியல் சோ்த்தார். அந்த கல்லுாரி நிர்வாகமே மாணவியின் மார்க்கை பார்த்து வாய்யைப் பிளந்தது.


மற்ற மாணவர்களும் அந்த மாணவிடம் தினம் தினம் துக்கம் விசாரிக்க ( நீங்கள் நம்பினால் நம்புங்கள்) அந்த மாணவி இப்போது எந்த சாதி பையனை காதலித்தால் தன் தந்தையை பழிவாங்க முடியும் என்று மாணவர்களிடம் சகஜமாக ஆலோசனை கேட்டு வருகிறாராம்.


இப்படி பணம், பொற்றோகளின் விழிப்புணர்வு, வீட்டில் கல்வி கற்கும் சூழல், ஆணாதிக்க மதிப்பீடுகள் இவ்வளவு ஏற்றதாழ்வுகள் உள்ள சமூகத்தில் கல்வியையும் ஏற்றத்தாழ் வோடு வழங்கினால் அந்த சமூகம் வளர்ச்சி பெறுமா?


ஆகவே ஒர் சமூகம் - நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் எல்லா துறைகளிலும், எல்லாதரப்பு மக்களில் பங்கேற்ப்போடும் வளரவேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி.


அதற்கு குறைந்தபட்ச செய்யல் திட்டம் தான் சமச்சீர்க் கல்வி. இதுவே மிகவும் காலம் கடந்து வந்த விழிப்புணர்வு. இதைவும் சீர்குலைக்க கல்வி வியாபாரிகள் முயல்கிறார்கள். சாராயம் காய்ச்சியவர்கள், கஞ்சா கடத்தியவர்கள் எல்லாம் கல்வி வியாபாரத்திற்கு வந்தது ராசிவ் காந்தியில் புதிய கல்விக் கொள்கைக்குப் பிறகு. அதிலே போலிஸ் தொந்தரவு, அடிதடி எல்லாம். இதிலோ பணத்திற்கு பணம், கல்வி தொண்டு செய்பவர் என்கிற பேர் வேறு. இந்த மானங் கெட்ட வியாபாரிகளுக்கு பொற்றோர்களின் அறியாமைதான் மூலதனம்.


மக்களுக்கு நாம் சொல்வது எல்லாம்


1. பொது கல்வி என்பது புதிது அல்ல. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக இருந்துதான். அப்துல்கலாம் முதல் மயில்சாமி அண்ணாதுரை வரை படித்ததுதான்.


2. Language studies க்கும் Medium of instruction க்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். முதலாவது குறிப்பிட்ட ஒரு மொழியையே பாடமாக படிப்பது. நாம் படிக்கும் தமிழ், ஆங்கிலம், இந்தி போல.


இரண்டாவது பாடங்களை ஏதாவது ஒரு மொழியின் வழியாக கற்று அறிவை வளர்த்துக் கொள்வது

(உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்வதென்றால் மதிப்பெண் வாங்குவது) அந்த ஏதாவது ஒரு மொழி தாய் மொழியாக இருக்கும் போது புரிந்து-ஆழ்ந்து படிக்க முடியும். பாடங்கள் தாய் மொழியில் கற்பிக்கும் போதுதான் எளிதில் புரிய ஆரம்பிக்கும். புரிய ஆரம்பிக்கும் போதுதான் சந்தேகங்களும் கேள்விகளும் வரும். நல்ல கேள்விகள் நிறைய பதில்களை தரும். அந்த நிறைய பதில்கள் புதிய கேள்விகளை தோற்றுவிக்கும்.

ஆங்கிலம் என்கிற வேற்று மொழியில் கற்கும் போது என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதிலேயே சிரமப்படும் போது கேள்விகளும் தோன்றாது.. அதனால் பதில்களுக்கும் தேவையிருக்காது. எல்லாம் டப்பா... டப்பா... தான்


மாறாக சொந்த தாய் மொழியில் படித்தவர்கள் பாடதிட்டத்தை தாண்டி சந்தேகம் எழுப்புகிறார்கள். அவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்களாக உருவாகிறார்கள். அதனால் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப படிப்புக்களை தமிழ் கொண்டுவரவேண்டும். ஆரம்பம் முதல் ஆராய்ச்சி கல்விவரை அனைத்தும் தாய் மொழில் வேண்டும்.


இப்படித்தான் ஜப்பானியர்கள், சீனர்கள், ஜெர்மானியர்கள், ரஷ்யார்கள், ஆங்கிலேயர்கள்(ஆங்கிலம் அவர்கள் தாய் மொழி) இன்னும் முன்னேறிய அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் ஆரம்பம் முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தையும் தங்கள் தாய் மொழியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


வேற்று மொழியில் படித்து முன்னெறிய நாடு என்று ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்


ஆக , சமச்சீர் கல்வியும் வேண்டும் அது தாய் மொழிவழியாகவும் கற்பிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் ஓரு மொழிப் பாடமாக இருக்கட்டும்.



3. பெற்றோர்கள் பிள்ளைகளை சுயநலவாதிகளாக வளர்க்கக் கூடாது. சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். யார் எப்படி போனாலும் நீ மட்டும் படி என்று சொல்லி சுயநலத்தோடு வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்தும் பெற்றோர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள். சமூக அக்கறையோடும் பொதுநல சிந்தனையோடு வளர்க்கப்பட்ட குழந்தைகள் பொற்றோரை பேணுவது தங்கள் கடமையாக கொள்கிறார்கள்.


செயலலிதா அரசு சமச்சீர்க் கல்வியை குழி தோண்டி புதைக்க எண்ணுகிறது. ஈழப்பிரச்சனை ஒட்டிய தீர்மானங்கள் - அதை டெல்லியில் வலியுறுத்தும் விதம் எல்லாம் பாராட்டதக்கவையே. ஆனால் சமசீர்க் கல்வி விவகாரத்தில் கல்வி முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது.


தேர்தலுக்கு முன்பாகவே கல்வி வியாபாரிகள் அவரை சந்தித்து சரி கட்டியதாக தெரிகிறது. அதனால் தான் பதவியேற்வுடன் அவசர அவசரமான சமச்சீர்க் கல்வியை தடை செய்தார்.


கல்வி வியாபாரிகளே நீங்கள் வேறு தொழிலுக்கு போய்விடுங்கள். மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். இனி கல்வியும் கட்டணமும் மக்கள் விருப்பப்படி. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்கிற உங்கள் பொய்களை புள்ளிவிபரங்கள் தவிடு பொடியாக்குகின்றன. டான் பாஸ்கோ.. ஷெசாத்திரி போன்றவை வெறும் 20 விழுக்காடு பள்ளிகளே... மற்ற மெட்ரிக் எல்லாம்

எப்போது கும்பகோணம் விபத்திற்கு ஆளாகுமோ என்கிற ஆச்சத்தை உண்டுபண்ணும் பள்ளிகளே...


எனவே அனைவருக்கும் கட்டாய இலவச சமசீர்க் கல்வி. இது தற்போதைய இலக்கு.

நமது அடுத்த இலக்கு அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம்

No comments:

Post a Comment